ராமாவரம் தோட்டத்துக்குப் போனா கண்டிப்பா நம்ம வீட்ல உலை பொங்கும்!

ஒசாமஅசா தொடர்; 16   எழுத்தும், தொகுப்பும்; மணா

பம்பாய்க்கு நாடகம் நடத்த ஒருமுறை நான் போயிருந்தபோது தெருவில் எங்கள் குழுவினரோடு போய்க்கொண்டிருந்தேன்.

அப்போது வழியில் சந்தித்த ஒரு வயதான கிழவி சொன்னார்.

“தம்பி.. உன்னை எம்.சி.ஆர். நடிச்ச படங்கள்லே பாத்திருக்கேன்.. நல்லா நடிக்கிறே.. எனக்கு நீ ஒரு உதவி செய்யணுமே..

“என்னம்மா… சொல்லுங்க”..  – என்றேன்.

“எம்.சி.ஆர். கிட்டே நான் விசாரிச்சேன்னு சொல்றீயா?”

அவருடைய பெயர், முகவரி எதையும் அவர் சொல்லவில்லை. அப்படியே போய்விட்டார். இந்த மாதிரியான ஈர்ப்பு சக்தி ஒரு நடிகருக்கு இருப்பதை உணர்ந்தபோது வியப்பாக இருந்தது.

அவரிடம் இயல்பாக இருந்த வள்ளல் தன்மை அதற்கு ஒரு முக்கியமான காரணம். விளம்பரத்திற்காக அவர் அப்படிப் பண்ணுகிறார் என்று அவரைச் சிலர் விமர்சிப்பதைப் பார்த்திருக்கிறேன். விளம்பரத்திற்காக அவர் சில விஷயங்களைச் செய்திருக்கலாம். ஆனால் விளம்பரம் செய்துகொள்ளாமல், விளம்பர நோக்கம் இல்லாமல் அவர் பிறருக்குச் செய்த உதவிகள் ஏராளம்.

யாராவது அவருக்கு முன்னாடி கஷ்டப்படுவதைப் பார்த்தால், உடனே உதவி பண்ணியிருக்கிறார். சினிமாவுலகில் அவருக்கு எதிராக இயங்கியவர்களுக்குக் கூட அவர் உதவியிருக்கிறார்.

சட்டாம்பிள்ளை வெங்கட்ராமன் என்கிற நடிகருடைய தாயார் மறைந்தபோது அவர் போய் நின்ற இடம் எம்.ஜி.ஆரின் ராமாவரம் வீடு. அவரை அடையாளம் கண்டு விசாரித்த எம்.ஜி.ஆர். உடனே வீட்டில் இருந்தவர்களை அழைத்தார்.

“இவருக்கு ஒரு வேலைக் கொடுத்திருங்க. தேவைப்படுகிற பணத்தைக் கொடுத்திருங்க” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார்.

அந்த முதிர்ந்த நடிகரான வெங்கட்ராமன் பிறகு சொன்னார். “வீட்டிலே அடுப்பில் உலையை வைச்சுட்டு ராமாவரம் தோட்டத்துக்குப் போனா கண்டிப்பா உலை பொங்கும்”.

இதெல்லாம் நான்கு பேருக்குத் தெரியவேண்டும் என்பதற்காகச் செய்கிற காரியங்கள் இல்லை. எனக்குத் தெரிந்து அவரிடம் உதவி பெற்றவர்கள் பலர். அதெல்லாம் வெளியே தெரிய வந்ததில்லை.

“ஒருமுறை அவுட்டோர் ஷூட்டிங்கிற்காக காரில் எம்.ஜி.ஆருடன் போய்க் கொண்டிருந்தோம். நல்ல வெயில் நேரம். யாரோ ஒரு அம்மாள் காலில் செருப்பில்லாமல் போவதைப் பார்த்துவிட்டு, என்ன நினைத்தாரோ, அந்தக் கால்களின் சூட்டைத் தான் உணர்ந்த மாதிரி, சட்டென்று தன்னுடைய காலில் போட்டிருந்த செருப்புகளைக் கழட்டி அந்த அம்மாவிடம் கொடுத்துவிட்டார்.

எம்.ஜி.ஆர். கூட இருந்த டிரைவருக்கும், எங்களுக்கும் தான் இது தெரியும். அவரிடம் வந்து யாரும் கேட்கவில்லை. இருந்தபோதும் தானாகச் செய்தார்” என்று எம்.ஜி.ஆருக்கு நெருக்கமான ஒருவர் என்னிடம் சொல்லியிருக்கிறார்..

அவரிடமிருந்த ஏதோ ஒரு குணம் அவரை அப்படிச் செயல்பட வைத்திருக்கிறது. இது மிகையில்லை. அவருடைய இயல்பு.

எம்.ஜி.ஆருக்கு இருந்த இளகிய சுபாவத்துக்கு உதாரணமாக நான் பார்த்தவரையில் எத்தனையோ நிகழ்ச்சிகளைச் சொல்லலாம்.

வெளியூர்களில் ‘ஷூட்டிங்’ நடக்கும்போது டெக்னீஷியன்கள் உட்படப் பலருக்கு போடப்படும் சாப்பாட்டை அந்த இடத்துக்குப் போய் சாப்பிட்டுப் பார்ப்பார். அவர் சம்பந்தப்பட்ட ஷூட்டிங்கில் எப்போது வேண்டுமானாலும் இப்படி அவர் சோதிப்பது நடக்கும் என்பதால் படக்குழுவினர் அனைவருக்கும் வழங்கப்படும் சாப்பாடும் தரமாகவும், சுவையாகவும் இருக்கும்.

அவருடன் பல படங்களில் நடித்திருக்கிறேன். அப்போது என்மீது விசேஷமான பரிவைக் காட்டியிருக்கிறார். நான் அப்போது மாலை நேரங்களில் நாடகங்கள் நடத்திக் கொண்டிருந்ததால் நான் சம்பந்தப்பட்ட காட்சிகளை சீக்கிரமே எடுத்து அனுப்புவார்.

‘அடிமைப்பெண்’ படத்திற்காக ஜெய்ப்பூரில் பதினைந்து நாட்களுக்கு மேல் ‘ஷூட்டிங்’. நான் புறப்படுவதற்கு முன்பே அவரிடம் நான் லீகல் அட்வைஸராக இருந்த டி.டி.கே. கம்பெனியில் ஒரு வழக்கு விஷயமாக குறிப்பிட்ட நாளில் சென்னை திரும்பியாக வேண்டும்.

அந்த வழக்கில் வாய்தா கேட்காமல் நான் ஆஜராக வேண்டும் என்பதையும் சொல்லியிருந்தேன். அவரும் எப்படியாவது அதற்குள் என்னை அனுப்பி விடுவதாகச் சொல்லியிருந்தார்.

ஜெய்ப்பூருக்குக் கிளம்பிப் போய்விட்டோம். அதற்குப்பிறகு எம்.ஜி.ஆரிடம் நான் அதை நினைவுப்படுத்தவில்லை. ‘ஷுட்டிங்’ நடந்து கொண்டிருந்தபோது எனக்குத் தாங்க முடியாத அளவுக்கு வயிற்றுவலி. துடித்துப்போய் விட்டேன். எம்.ஜி.ஆர். என்னை வந்து பார்த்தார்.

“உங்களுக்கு உடம்பு சரியாகிற வரைக்கும் நடிக்க வேண்டாம். ரெஸ்ட் எடுங்க. சென்னைக்குப் போக ‘டிலே’ ஆகிடும்னு நினைக்காதீங்க. உங்களைச் சொன்னபடி சரியா அனுப்பி வைச்சுடுவேன்” என்று சொல்லிவிட்டு அவருக்காக அவருடன் வந்திருந்த டாக்டரை என்னுடன் தங்க வைத்துக் கவனித்தார்.

என்னுடன் வந்திருந்த நண்பர்களை அழைத்து “அவர் கூடவே இருந்து கவனிச்சுக்குங்க. அவர் எதையும் கேட்கத் தயங்குவார். நீங்க எது வேண்டுமானாலும் புரொடக்ஷன் மேனஜரை உடனே காண்டாக்ட் பண்ணுங்க” என்று பரிவோடு என்னைப் பார்த்துக் கொண்டார்.

அன்றைக்கு நான் சென்னைக்குக் கிளம்ப வேண்டிய தினம். அதை நான் வலியுறுத்தாவிட்டாலும் நான் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தையும் அன்று மாலைக்குள் எடுத்து முடித்துவிட்டு, “நான் சொன்னபடி செஞ்சுட்டேன். பார்த்தீங்களா?” என்று கேட்டார்.

நாங்கள் ஜெய்ப்பூரில் இருந்தபோது அவருடைய நூறாவது படமான ‘ஒளிவிளக்கு’ தமிழகத்தில் ரிலீஸாகி நல்ல வரவேற்பு.

நாங்களோ பாலைவனத்தில் ஷூட்டிங்கில் இருந்தோம்.

“ஏமாற்றாதே… ஏமாற்றாதே…” பாட்டுக்கான ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தது. ‘ஒளிவிளக்கு’ ரிலீஸ் ஆனதற்காக எம்.ஜி.ஆரைப் பாராட்டி ஏதாவது செய்ய வேண்டும் என்று அங்கிருந்த நண்பர்களுடன் கூடி முடிவு செய்தேன்.

ஒரு பெரிய விளக்கை வாங்கினோம். அதில் நூறு துவாரங்கள் இருந்தன. அதில் வரிசையாக எம்.ஜி.ஆர். நடித்த படங்களை எழுதி ஒட்டி அன்றைக்கு இரவு படப்பிடிப்பு முடிந்ததும் எம்.ஜி.ஆரிடம் கொடுத்தோம்.

அன்றைக்கு மிகவும் நெகிழ்ந்து “நான் இதை ரொம்பப் பத்திரமா வைச்சிருப்பேன்” என்றார் எம்.ஜி.ஆர்.

அவருடைய ஞாபக சக்தி அசாத்தியமானது. எப்படி இதையெல்லாம் அவர் துல்லியமாக நினைவில் வைத்திருக்கிறார் என்று ஆச்சர்யமாக இருக்கும். ஜெய்ப்பூரில் ‘அடிமைப்பெண்’ ஷூட்டிங். என்னுடன் சில நண்பர்களும் வந்திருந்தார்கள்.

நான் அங்கு போனதும் ‘மேக்கப்’ போடப் போய்விட்டேன். நண்பர்கள் ‘ஷூட்டிங் ஸ்பாட்’டை வேடிக்கை பார்க்கப் போய்விட்டார்கள். அப்படி முதலில் அங்கு போன என் நண்பர்களைப் பார்த்துவிட்டார் எம்.ஜி.ஆர். அவர்களுடைய பெயர்களை முதற்கொண்டு சரியாக நினைவில் வைத்து “நீங்க தானே ரெங்காச்சாரி?” என்று அவரவர் பெயர்களைச் சொல்லி அவர் கூப்பிட்டு விசாரித்ததும் அவர்கள் அசந்துபோய் அவரைப் புகழ ஆரம்பித்து விட்டார்கள்.

அதே மாதிரி இன்னொரு நிகழ்ச்சி, எங்கள் நாடகக்குழுவில் நடிக்கும் நண்பனான நீலு ஒரு முறை ஷூட்டிங்கிற்கு வந்திருந்தான். கல்கத்தாவில் வேலை பார்த்ததால் அங்கு ஒரு வருஷம் இருந்துவிட்டு அப்போதுதான் சென்னைக்கு வந்திருந்தான்.

அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்புதான் எங்களுடைய நாடகம் ஒன்றிற்கு தலைமை தாங்கியிருந்தார் எம்.ஜி.ஆர். அந்த நாடகத்தில் நீலு நடிக்கவில்லை. ‘எம்.ஜி.ஆரிடம் அவனை அழைத்துக் கொண்டுபோய், “இவன் தான் நீலு. எங்க டிராமாக்களில் நடிக்கிறான்” – அறிமுகப்படுத்தினேன்.

“எனக்குத்தான் இவரைத் தெரியுமே. உங்க நாடகத்தில் பார்த்தேனே!” – என்றார் எம்.ஜி.ஆர்.

“சார்.. இரண்டு நாட்களுக்கு முன்னாடி நீங்க பார்த்த டிராமாவில் இவன் நடிக்கவே இல்லை. இன்னைக்குத்தான் சென்னைக்கு வந்திருக்கான். இவனைத்  தெரியும்னு சொல்றீங்களே” என்று நான் குறுக்கிட்டேன்.

“நான் ரெண்டு நாட்களுக்கு முன்னாடி பார்த்த நாடகத்தில் இவர் நடிச்சதா நான் சொன்னேனா? உங்க நாடகத்தில்னுதானே சொன்னேன்.

போன வருஷம் நான் பார்த்த உங்க நாடகத்தில் வக்கீல் வேஷம் போட்டவர்… இவர்தானே. அதைத்தான் நான் சொன்னேன்” கேட்டுக் கொண்டிருந்த நானும், நண்பர்களும் திகைக்கிற அளவுக்கு இருந்தது. அவருடைய அபாரமான நினைவாற்றல்.

(தொடரும்…)

04.01.2021 04 : 55 P.M

Comments (0)
Add Comment