நாம் யார் என்பதை உணரும் தருணம் வரும்போது, தன்னம்பிக்கையோடு முயற்சி செய்தால் வாழ்க்கையில் வெற்றிபெறலாம். இந்தக் கருத்தை உணர்த்தும் விதமாக, தன்னம்பிக்கைப் பேச்சாளர், சிந்தனையாளர் தென்கச்சி கோ.சுவாமிநாதன் சொன்ன ஒரு கதை இதோ உங்கள் பார்வைக்கு:
“ஒரு கழுகு ஒன்று மரத்தின் உச்சியில் உள்ள ஒரு கிளையில் முட்டையிட்டு அதனை அடைகாத்து வந்தது.
ஒருநாள் உணவுக்காக அது கூட்டைவிட்டு வெளியே பறந்த சமயத்தில், பலமாக காற்று வீசியதால் அடைகாத்து வைத்திருந்த முட்டைகளில் ஒன்று மரத்திலிருந்து கீழே விழுந்தது.
அதிருஷ்டவசமாக அந்த முட்டை உடையவில்லை.
ஏனென்றால் அந்த மரத்தின் அடியில் ஒரு கோழியும் அடைகாத்து வந்திருக்கிறது.
இந்தக் கழுகு முட்டை, கோழி முட்டைகள் இருந்த இடத்திற்கு அருகே விழுந்தது. ஆனால் முட்டைக்கு எந்தச் சேதாரமும் ஏற்படவில்லை.
சிறிது நேரம் கழித்து அங்கு வந்த கோழி மரத்திலிருந்து விழுந்த முட்டையையும் தன் முட்டை என்று நினைத்து மற்ற முட்டைகளோடு சேர்த்து பக்குவமாக பாதுகாத்தது.
சில நாட்களுக்கு பிறகு, மரத்தின் உச்சியில் இருந்த கழுகு தன்னுடைய குஞ்சுகளை அழைத்துக்கொண்டு வேறு ஒரு பாதுகாப்பான இடத்திற்கு பறந்துவிட்டது.
அதே சமயம் மரத்தின் அடியில் அடைகாத்த கோழியும் தன் குஞ்சுகளை அழைத்து கொண்டு குப்பைகள் நிறைந்த ஒரு பகுதிக்குச் சென்று, குப்பையைக் கிளறி அங்கிருந்த இரையைக் கொத்தித் தின்று கொண்டிருந்தது.
கூட்டத்தில் இருந்த கழுகும் மற்ற கோழிகளைப் போலவே குப்பையைக் கீறி கொண்டிருந்தது.
ஒருநாள் வானத்தில் பறந்து கொண்டிருந்த மற்ற கழுகுகளைப் பார்த்து, கோழிகளோடு இருந்த கழுகு இன்னொரு கோழியைப் பார்த்து கேட்டதாம்.
“நம்மளால அவுங்க மாதிரி வானத்துல பறக்க முடியாதா?”
அதற்கு கோழி சொன்னதாம், “ஆண்டவன் அவுங்களுக்கு பறக்குற திறமையைக் கொடுத்திருக்கான் நம்மளால அவ்வளவு உயரத்தில் பறப்பதற்கு வாய்ப்பே இல்ல”
“நான் வேணும்னா முயற்சி பண்ணி பாக்கவா” என்று அந்தக் கழுகு கேட்டது.
அதற்கு கோழி, “உன்னாலயும் என்னாலயும் எப்பவுமே அவுங்கள மாதிரி பறக்க முடியாது. நாம வாழ்க்கை பூரா உணவுக்காக இந்த மாதிரி குப்பையை தான் கீறிக்கிட்டே இருக்கணும்” என்று சொல்லிவிட்டு நகர்ந்தது.
கோழி சொன்னது அனைத்தையும் உண்மை என்று நம்பிய கழுகு, அதன்பிறகு பறப்பதற்கு முயற்சியே செய்யாமல் தன் வாழ்நாள் முழுவதும் கோழியைப் போலவே வாழ்ந்ததாம்.
நம்மில் பலரும் கழுகைப் போல பறக்கும் திறமை கொண்டவர்களாக இருக்கின்றோம். ஆனால் உரிய சந்தர்ப்பத்தில் தன்னம்பிக்கையோடு முயற்சி செய்யாமல் இருந்தோமேயானால் கடைசி வரை நம் வாழ்வும் இந்தக் கதையில் வரும் “கோழியை போல் வாழும் கழுகு போல ஆகிவிடும் என்பதே இந்தக் கதையின் கருத்து” எனக் கூறினார்.
02.01.2021 12 : 46 A.M