2020: சில சுவாரசியமான இணையதளங்கள்!

புத்தாண்டு பிறந்திருக்கும் நிலையில், கடந்த ஆண்டின் சிறந்த செயலிகள், இணையதளங்களைப் பட்டியலிடுவது எதிர்பார்க்கக் கூடியதுதான் என்றாலும், இது 2020-ம் ஆண்டின் சிறந்த இணையதளங்களைப் பட்டியலிடும் முயற்சி அல்ல.

மாறாக, பலவிதங்களில் சவாலான ஆண்டாக அமைந்த 2020-ல், மிகவும் சுவாரஸ்யமாக அமைந்த ஒரு சில இணையதளங்களை அடையாளம் காட்டும் முயற்சி என்கிறார் இணையவெளி மாற்றங்களை எழுதிவரும் பத்திரிகையாளர் சைபர் சிம்மன்.

இந்த அறிமுகமே சற்று முரண்நகையானதுதான். கொரோனா பெருந்தொற்றுக்கு மத்தியில் கேலியையும், நகைச்சுவையும் முன்வைக்கும் வகையில் அமைந்த இணையதளங்கள் இவை எனினும், தேய்வழக்காகச் சொல்லப்படும், ரோம் நகரம் பற்றி எரிந்தபோது, நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருந்ததுபோல் அல்லாமல், இந்தத் தளங்களின் சுவாரசியமான தன்மை ஏதோ ஒருவிதத்தில் கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் ஆசுவாசம் அளிப்பதாக அமைந்தது.

உலகமே, பெரும் நெருக்கடியில் சிக்கி, அடுத்து என்ன எனப் புரியாமல் தவித்துக் கொண்டிருந்த நிலையில், எங்கும் ஒருவித இருண்மையும், சோகமும் கவிந்திருந்த சூழலில், லேசாகப் புன்னகைக்க வைத்து நம்மை அறியாமல் சற்று நம்பிக்கை கொள்ளவும் வைத்த இணையதளங்கள் இவை!

ஹாலிவுட்  ரஜினி

இந்த இணையதளத்திற்கும் நம்மூர் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்க்ஸ் பெயரில் அமைக்கப்பட்ட இந்த இணையதளத்தை அறிமுகம் செய்யும்போது ஏனோ ரஜினியை மேற்கோள் காட்டத் தோன்றுகிறது.

ஹவ் ஈஸ் டாம் ஹாங்க்ஸ் டூயிங் (http://howistomhanksdoing.com) என்ற பெயரில் அமைக்கப்பட்ட இணையதளம், கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கிய ஏப்ரல் காலகட்டத்தில் அறிமுகமானது.

அப்போது, ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்க்ஸ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவது தொடர்பான செய்திகள் வெளியாகிக்கொண்டிருந்தன. இந்த பின்னணியில், டாம் ஹாங்க்ஸ் எப்படி இருக்கிறார்? எனும் கேள்விக்குப் பதில் அளிப்பதுபோல இந்த தளம் அமைந்திருந்தது.

டாம் ஹாங்க்ஸ் எப்படி இருக்கிறார்? எனும் கேள்வியே தளத்தின் முகவரியாக அமைந்த நிலையில், அவரது புகைப்படத்தின்கீழ், பெரிய எழுத்துகளில், டாம் ஹாங்க்ஸ் நலமாக இருக்கிறார்’ என அறிவிக்கும் வாசகம் இடம்பெற்றிருந்தது. டாம் ஹாங்க்ஸ் நலமாக இருக்கிறார் எனும் ஒற்றை வரி தான் மொத்த இணையதளமுமாக அமைந்திருந்தது.

இப்படி ஒரு இணையதளம் அமைக்கப்பட்டது டாம் ஹாங்க்ஸ் ரசிகர்களுக்காக என்பதைவிட, கொரோனா பரபரப்புக்கு மத்தியில் கொஞ்சம் நகைச்சுவை உணர்வை அளிப்பதற்காகத்தான்.

இந்த தளம் சும்மா நகைச்சுவைக்காக உருவாக்கப்பட்டது. ஆனால், டாம் ஹாங்க்ஸ் நலமாக இருப்பது ஆறுதல் அளிக்கிறது, இந்த சூழலில் நாம் எல்லோரும் ஒன்றாக இருக்கிறோம் என்ற வாசகமும் இந்த தளத்தில் சின்னதாக  இடம்பெற்றிருந்தது.

இந்தத் தளத்திற்குப் பலவிதமாக விளக்கம் அளிக்கலாம். ஒரு பிரபலத்தின் உடல்நலம் தொடர்பான எதிர்பார்ப்பு மற்றும் பரபரப்பைப் பகடி செய்யும் தளம் எனவும் வைத்துக்கொள்ளலாம்.

ஆனால், கொரோனா உச்சம் தொடத்துவங்கி எங்கும் எதிர்மறையான, சோகமான செய்திகள் அதிகம் வெளியாகிக் கொண்டிருந்த நிலையில், இந்த பரபரப்பில் இருந்து சற்று விலகி, லேசான நோக்கில் அமைக்கப்பட்ட தளமாக இது அமைந்தது.

கொரோனா தொடர்பான செய்திகள் பெரும்பாலும், இருண்மை வகையாகவே அமைந்த நிலையில், அதை பின்தொடர்வதே கலக்கத்தையும், சோர்வையும் அளித்தது. கொரோனா தொடர்பான தகவல் அளிக்கும் தளங்களில் நான் பின்தொடர விரும்பும் ஒரே தளம் என இணையவாசி ஒருவர்  கருத்து தெரிவித்திருந்தார்.

இந்தத் தளத்தின் சிறப்பும் அதுதான். பொதுவாக, கேலியையும், நகைச்சுவையையும் சரியாகக் கையாள வேண்டும். அதிலும், கொரோனா நெருக்கடி போன்ற அனைவருக்கும் சோதனையான காலத்தில், மென் நகைச்சுவையை மிகச்சிறந்த கையாண்ட தளமாக இது அமைகிறது.

எங்கும் சோகமும், அச்சமும் ஆதிக்கம் செலுத்திய சூழலில், லேசாக புன்னகைக்க வைக்கும் உள்ளடக்கத்தை இந்தத் தளம் கொண்டிருந்ததோடு, மெல்லிய நம்பிக்கைக் கீற்றையும் கொண்டிருந்தது. இதற்காகவே 2020 ம் ஆண்டின் சிறந்த தளங்களில் ஒன்றாக  இதைக் கருதலாம்.

ஹைக்கூ செய்திகள்

இதேபோல கொரோனா காலத்து இருண்மை செய்திகளை நகைச்சுவையாக அணுக ஆசுவாசம் அளித்த இன்னொரு அருமையான இணையதளம் டூம்ஹைகூஸ் (https://doomhaikus.3iap.co/).

எல்லோரும் கொரோனா செய்திகளைப் படபடப்புடன் பின் தொடர்ந்து கொண்டிருந்த நிலையில், இந்தத் தளம் கொரோனா பற்றிய பரபரப்பு செய்திகளை, ஹைக்கூ கவிதையாக மாற்றி வெளியிட்டு வந்தது.

கொரோனா செய்திகள் பெரும்பாலும், எல்லாம் முடிந்தது என்பது போன்ற உணர்வை அளித்த நிலையில், அந்த இருண்மை உணர்வைப் பகடியால் வெளியேற்றி விடுவது போல, இந்தத் தளம், மோசமான தகவல்கள் கொண்ட செய்திகளை ஹைக்கூ கவிதைகளாக மாற்றி வெளியிட்டது.

இந்தத் தளத்தை அமைத்தவர், இதற்காக என்று ஒரு மென்பொருளை உருவாக்கி இருந்தார். அது கொரோனா தலைப்புச் செய்திகளை சேகரித்து, அதை மெக்கானிக்கல் டர்க் எனும் இணையதளத்தில் சமர்ப்பித்து, ஹைக்கூ கவிதைகளாக உருவாக்கிப் பெற்றுக் கொண்டது. இந்த கொரோனா ஹைக்கூ கவிதைகளை இந்தத் தளத்தில் இப்போதும் மாத வாரியாகப் படித்து மகிழலாம்.

-தான்யா

02.01.2021  11 : 50 A.M

Comments (0)
Add Comment