புத்தாண்டில் வெளியாகும் சினிமாக்கள்!

உலகப்பந்தை கோலி விளையாடுவது போல உருட்டி உருட்டி ஆட்டம் போட்ட கொரோனா, சினிமா உலகில் ஏற்படுத்திய சிராய்ப்புகள் ரொம்பவே அதிகம்.

உச்ச நட்சத்திரங்களின் ஒரு மணி நேர ‘கால்ஷீட்’ தங்கமென பாதுகாக்கப்பட்ட செல்லூலாயிட் ஆலையில், அவர்களின் ஒரு வருட ‘கால்ஷீட்’டை தின்று ஏப்பம் விட்டது கொரோனா.

இந்தப் புத்தாண்டு, சினிமாவுக்கு – குறிப்பாக தென்னிந்திய சினிமாவுக்கு புத்துயிர் ஊட்டும் ஆண்டாக ஆரம்பத்திலேயே அமைந்திருப்பது சந்தோஷமான விஷயம்.

அடுத்தடுத்த நாட்களில் தென்னிந்திய சினிமாவுக்கு, சுவாசம் அளிக்கப்போகும் நான்கு படங்கள் குறித்த விவரங்களை காணலாம்.

நான்கும் நான்கு மொழிப்படங்கள்.

ஆனாலும் நான்கு மாநில ரசிகர்களின் ஒட்டு மொத்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள படங்கள். அவை:

மாஸ்டர் (தமிழ்)
RRR (தெலுங்கு)
கே.ஜி.எஃப்-2 (கன்னடம்)
மரக்காயர் – அரபிக் கடலிண்டே சிம்ஹம் (மலையாளம்)

மாஸ்டர்:
விஜய் நடிப்பில் உருவான இந்தப்படம் கடந்த ஏப்ரல் 10 ஆம் தேதியே ரிலீஸாகி இருக்க வேண்டும். ஊரடங்கு காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதால் எட்டு மாத காலம் தாமதமாக, வரும் 13 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

மாளவிகா கதாநாயகி என்பதும், லோகேஷ் கனகராஜ் இயக்கம் என்பதும் பலமுறை எழுதி சலித்துப்போன விஷயங்கள். சூர்யா போன்றோரின் படங்கள் எல்லாம் ஓ.டி.டி.யில் வெளியான சமயத்தில், மாஸ்டர் படத்தையும் வாங்க ஏகப்பட்ட போட்டி நிலவியது. அமேசான் பிரைம் நிறுவனம் 120 கோடி ரூபாய் தருவதாக ஆசை காட்டியது.

விஜய்யும், தயாரிப்பாளர் பிரிட்டோவும் ‘’ரிலீஸ் என்றால், அது தியேட்டரில் தான்’’ என்பதில் உறுதியாக நின்றார்கள். இதனை செயலிலும் காட்டியுள்ளனர்.

தமிழ் தவிர தெலுங்கு, இந்தியிலும் மாஸ்டர் ‘டப்’ செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது. இந்தியில் ‘VIJAY THE MAASTER’ எனப் புதுப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. கேரளாவில் நல்ல விலைக்கு படம் விற்கப்பட்டுள்ளது. ஆனால் அங்கு கொரோனா உச்சம் தொட்டு நிற்பதால், தியேட்டர்கள் இன்னும் திறக்கப்படவில்லை.

போஸ்டர்களை பார்த்து ஏங்கி நிற்கும் கேரள விஜய் ரசிகர்கள் “மாஸ்டர் படத்தை, கேரளாவில் வெளியிட வகை செய்தால், இடதுசாரி அரசுக்கு நாங்கள் வாக்களித்து வெற்றி பெறச் செய்வோம்’’ என சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட வண்ணம் உள்ளனர். ஆனால் அதற்கான வாய்ப்புகள் இருப்பதாகத் தெரியவில்லை.

ஆர்.ஆர்.ஆர் (RRR):

‘ரவுத்ரம், ரணம், ருத்ரம்’ என்பதன் சுருக்கம் தான் ‘RRR’. ‘பாகுபலி’ படத்தின் இரு பாகங்களையும் சூப்பர் ‘ஹிட்’ ரகமாக கொடுத்த எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கும் படம் என்பதால், இந்த படத்துக்கு இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

ராம் சரண் – ஜூனியர் என்.டி.ஆர். ஆகிய இருவரும் கதாநாயகன்களாக நடித்துள்ள இந்தப் படத்தில் அஜய் தேவ்கான், அலியா பட் ஆகிய இந்தி நட்சத்திரங்களும் நடித்துள்ளனர்.

பட்ஜெட் – 450 கோடி ரூபாய்.

ஆந்திர மாநிலத்தில் விடுதலைப் போராட்டத்துக்கு வித்திட்ட இரு பழங்குடியின போராளிகளைப் பற்றிய கதையை மூலமாகக் கொண்டு, கற்பனை கலந்து எடுத்து வருகிறார் ராஜமவுலி. அலியா பட் நடிக்கும் முதல் தென்னிந்திய படம்.

நம்ம ஊர் ஷங்கர் படங்களுக்கு உள்ள எதிர்பார்ப்பு இந்தப் படத்துக்கும் உண்டு. ஷூட்டிங் இன்னும் முடியவில்லை. எனினும் இந்த ஆண்டு ரிலீஸ் ஆவது உறுதி.

கே.ஜி.எஃப் – 2:

கன்னடப் படங்கள் பொதுவாக அந்த மாநிலத்தைத் தாண்டி ரிலீஸ் ஆவதும், வெற்றி பெறுவதும் ரொம்பவும் அபூர்வம்.

ஆனால் கே.ஜி.எஃப். இந்தியா முழுவதும் சக்கைப்போடு போட்ட படம். இதன் கதாநாயகன் யஷ், ஒரே நாளில் பெரும் புகழ் வெளிச்சம் பெற்றார். இதனால் ‘கே.ஜி.எஃப்- 2’ என்ற பெயரில் இதன் இரண்டாம் பாகம் நூறு கோடி ரூபாய் செலவில் தயாராகிறது.

இவ்வளவு பெரிய பட்ஜெட்டில் கன்னடப் படங்கள் எடுக்கப்படுவதில்லை. பிரஷாந்த் நீல் இயக்கும் இந்தப் படத்தில் சஞ்சய் தத் வில்லனாக நடிப்பது, வேறு ஒரு பரிமானத்தை கொடுத்திருப்பது உண்மை.

90 சதவீத படப்பிடிப்பு ஊரடங்கு காலத்துக்கு முன்பே முடிந்துள்ள நிலையில் எஞ்சிய ஷூட்டிங் அண்மையில் ஐதராபாத்தில் நடந்து முடிந்துள்ளது. நாடு முழுக்க இந்த படத்துக்கு வெயிட்டிங்.

மரக்கார் – அரபிக்கடலிண்டே சிம்ஹம்:

மோகன்லால் கதாநாயகனாக நடிக்க, பிரியதர்ஷன் இயக்கியுள்ள இந்தப் படம், கடந்த ஏப்ரல் மாதமே ரிலீஸ் ஆவதாக இருந்தது. கொரோனாவின் சீற்றத்தால், முடங்கிப் போன பெரிய படங்களில் இதுவும் ஒன்று.

கள்ளிக்கோட்டையில் கடற்படைத் தளபதியாக இருந்த குஞ்சலி மரக்கார் என்பவர் வரலாற்றை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. 100 கோடி ரூபாய் பட்ஜெட்.

தேசிய விருது பெற்ற கலை இயக்குநர் சாபு சிரில், இந்தப் படத்துக்காக கடுமையாக உழைத்துள்ளார்.

மலையாளம் தவிர தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளிலும் ரிலீஸ் செய்ய திட்டம்.

கேரளாவில் தியேட்டர்கள் திறக்கப்படும்போது வெளியாகும் முதல் படமாக ‘மரக்கார்’ இருப்பார்.

உலகம் முழுவதும் 50 நாடுகளில் இந்தப் படத்தை வெளியிட ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ளது. கொரோனாவுக்குப் பிறகு தியேட்டர்கள் திறக்கப்பட்ட நிலையில், எதிர்பார்த்த கூட்டம் வராததால் சினிமா உலகம் உறைந்து நிற்கிறது.

மேற்சொன்ன நான்கு படங்களுக்குக் கிடைக்கும் வரவேற்பு, தென்னிந்தியாவில் தியேட்டர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் என்பதே நிஜம்.

– எம்.மாடக்கண்ணு

02.01.2021  12 : 30 P.M

Comments (0)
Add Comment