பிரபலங்கள் வாழும் காலத்தில் உணரும் சில சங்கடங்கள்!
மீள் பதிவு
*
ஊர்சுற்றிக் குறிப்புகள் :
*
“என்னுடைய அப்பாவுக்கு இந்த அளவுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு இருக்கும் என்பது எனக்குத் தெரியவில்லை’’
– பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைந்தபோது அவரது மகள் எஸ்.பி.பி.சரண் இயல்பாகப் பேசிய வார்த்தைகள் இவை.
இது சரணின் சொற்களுக்கான எதிர்வினையல்ல. அவர் வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறார்.
பல பிரபலங்களின் வாரிசுகள் அதைக்கூடச் சொல்வதில்லை. அவ்வளவு தான்.
இனி பொதுவாகப் பல பிரபலங்கள் வாழும்போது உரிய அசலான மதிப்பைப் பெறுகிறார்களா என்பதைக் கொஞ்சம் பார்ப்போம்.
பிரபலங்களோ, சராசரி மனிதர்களோ அவர்கள் வாழும் காலத்தில் என்ன தான் சிறப்பான செயல்களை, சாதனைகளைத் தாங்கள் செய்திருப்பதாக நினைத்திருந்தாலும், சொந்த உறவுகள் அவர்கள் சரிவரப்புரிந்து கொள்ளாத மனக்கசப்பை அனுபவித்தபடியே இருந்திருக்கிறார்கள். வெளியே நிமிர்ந்து நடப்பவர்கள் வீட்டிற்குள் நுழையும்போது, தாழ்வான நிலையில் தலை தட்டிய உணர்வைப் பெற்றிருக்கிறார்கள்.
மகாத்மா காந்தி சொந்த வாரிசாலேயே கனத்த அனுபவங்களை வாழ்நாளில் சந்தித்திருக்கிறார்.
காரணம்- பிரபலங்கள் அந்த உயரத்தைப் பல்வேறு வலிகளை ஏற்படுத்தும் சிரமங்கள், மனம் நோகும் அவமானங்கள், கட்டாயமாக்கப்பட்ட பணிவுகள் எல்லாவற்றையும் கடந்தபிறகே பெற்றிருக்கிறார்கள்.
ஆனால் அவர்களுடைய வாரிசுகள் அப்படியல்ல. வாழ்வின் சிரமங்களும், சிராய்ப்புகள் இல்லாமல் வளர்க்கப்பட்டவர்கள் பலர். இதில் விதிவிலக்கான வாரிசுகளும் உண்டு. மறுப்பதற்கில்லை.
பொருளாதார மதிப்பீட்டை மட்டும் உயர்த்திப் பிடித்து, அருகில் இருக்கும் தந்தையின் உயரத்தை அவர்கள் வாழ்கிறபோதே உணரத் தெரியாத அளவில்தான் பல வாரிசுகள் இருந்திருக்கிறார்கள்
அவர்கள் மறைந்த பிறகே அவர்கள் தங்களுடைய வாழ்வில் நிரப்பிய இடத்தைத் தாமதமாக உணர முற்படுகிறார்கள் அல்லது அவர்களைப் பற்றிச் சொந்தமாக ஒரு முடிவுக்கு வந்து அவர்களைப் பற்றிய நினைவை ஒதுக்கி வைக்கிறார்கள்.
மகாகவியான பாரதி துவங்கி பல எழுத்தாளர்கள், கலைஞர்கள், திரைப்படம் சார்ந்த பிரமுகர்கள், அரசியல்வாதிகள் என்று பலருக்கும் நிகழ்கிற சோகம் இது.
திரைத்துறையின் மிக உயரத்தில் கொடி பறக்கச் செய்து, வசதியிலும் பிரமாண்டமாக வாழ்ந்த நடிகரின் வாரிசை அவரது இறுதிக்காலத்தில் வசதிக்குறைவான ஒரு வீட்டில் சந்தித்தபோது, தூசி நிறைந்த தந்தையின் புகைப்படத்தைத் துடைத்தபடி “மற்றவர்களுக்கு வேண்டுமானால் அவர் பெரிய ஆளா இருக்கலாம். ஆனா எங்க குடும்பத்துக்கு அப்படி இல்லைங்க.. அதனாலே மதிக்கத் தோணலை’’ என்றார்..
ஒரு தலைமுறைக்குள் எவ்வளவு சம்பாதித்தும், பெயரெடுத்தபோதும் – இது தான் நிலைமை.
“இளம் வயசில் நான் எப்படி இருப்பேன் தெரியுமா? என்கிட்டே கொடுக்கப்பட்ட வேலையை அவ்வளவு சிரத்தையா, ஈடுபாட்டோட மனசு ஒன்றிப் பண்ணுவேன். சின்ன போஸ்டர் ஒட்டினாக் கூடக் கவனம் எடுத்துப்பேன்.. செய்கிற ஒவ்வொன்றிலும் நேர்த்தியை எதிர்பார்ப்பேன்.. ஆனா என் வாரிசுகள் கிட்டே எதிர்பார்த்து ஒய்ஞ்சு போய்ட்டேன்.. நான் வளர்ந்த விதம் வேற, அவங்க வளர்ந்த விதம் வேறன்னு புரிஞ்சுக்கவே சில காலம் பிடிச்சது.. என்ன செய்றது?’’ –தனிப்பட்ட முறையில் அவருடைய வீட்டில் இப்படிச் சொல்லிப் புலம்பியவர் முக்கியமான அரசியல் பிரமுகர்.
இன்னொருவர் அந்திமக்காலத்தில் தன்னை உயிருள்ள ஏ.டி.எம். இயந்திரத்தைப் போலச் சுற்றியிருப்பவர்கள் உணர்வதாக உலர்ந்த குரலில் சொன்னார்.
பொருளாதார ரீதியான பயன்பாடு சார்ந்தே ஒருவரை மதிப்பிடுகிற யதார்த்தத்தைப் பலர் அவரவர் அனுபவத்தில் கூசிப் போய் உணர்ந்திருக்கிறார்கள்.
மறைந்த பிறகு அஞ்சலியாகச் சொல்லப்படும் சொற்களை, அல்லது தாமதமாகக் காட்டுகிற அன்பை அவர்கள் வாழும் காலத்திலேயே அவர்களிடம் சொல்லியும், உணர்த்தியும் வந்திருந்தால் எவ்வளவோ மேலானதாக இருந்திருக்கும்.
அன்பு செலுத்துவதும், அதை வெளிக்காட்டுவதும் கூட நிகழ்காலத்துடன் அல்லது வாழும் காலத்துடன் சம்பந்தப்பட்டிருக்கலாம்.
யூகி