ஆரோக்கியம் குறித்த தேடல் பெருகிவரும் இவ்வேளையில் அதன் முக்கியத்துவத்தை அனைவரும் உணர்வது அவசியமாகிறது.
மாறிவரும் உணவு பழக்கங்கள், சீதோஷ்ண நிலை, வாழ்க்கை முறை, வேலை சுமை போன்ற பல்வேறு காரணங்களால் நம் உடல், நோய் தாக்குதலுக்கு உள்ளாகிறது. பாதிப்புகளிலிருந்து நம்மை தற்காத்துக் கொள்ளவும் வந்தபின் அவற்றை சரி செய்யவும் சில எளிய மூலிகைகளை நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்தனர்.
ஆரோக்கியத்துக்கு உடனடியாக பயன்படுத்தக்கூடிய வகையில் ஒவ்வொரு வீட்டிலும் வளர்க்க வேண்டிய மருத்துவ குணம் மிக்க இந்த செடிகளை பற்றிப் பார்ப்போம் .
துளசி:
துளசி, சளியைப் போக்கும் அருமருந்தாக கருதப்படுகிறது. மேலும் சிறந்த கிருமி நாசினியான துளசிச் செடியை வளர்ப்பதால், வீட்டை சுற்றிலும் உள்ள விஷ ஜந்துக்கள் மற்றும் கிருமி தொற்றுகளின் வரவு கட்டுப்படுத்தப்படுகிறது.
ஆக்சிஜனை அதிக அளவில் வெளியிடும் திறன் கொண்ட இச்செடியால் சுவாசிப்பதற்கு தூய்மையான காற்று கிடைக்கும். தினமும் துளசி நீரை அருந்துவதால் ஆரோக்கியம் மேம்படும். மஞ்சளுடன் துளசியைக் கலந்து உபயோகிக்கும்போது சரும நோய்களுக்கு விரைவில் தீர்வு கிடைக்கிறது.
கற்பூரவல்லி:
கற்பூரவல்லி இலையின் சாறும் ஜலதோஷத்திற்கு எதிரான சிறந்த மருந்தாக செயல்படுகிறது. அனைத்து வயதினருக்கும் இது ஏற்றதாகும். குறிப்பாக பச்சிளம் குழந்தைகளுக்கு இத்தகைய தொந்தரவுகள் ஏற்பட்டால், தாய்ப்பால் உடன் இதன் சாற்றை கலந்து கொடுக்க உடனடி நிவாரணம் கிடைக்கிறது. இதனைக் கொண்டு சிற்றுண்டியும் சமைக்க முடியும்.
கற்றாழை:
சோற்றுக் கற்றாழை என்று அழைக்கப்படும் இதன் மருத்துவ குணங்கள் எண்ணிலடங்காதவை. இதன் சதை பகுதியை பலமுறை கழுவி உண்டுவர, உடல் குளிர்ச்சி பெறும்.
பெண்களின் மாதவிடாய் பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வை இது தரவல்லது. இதனை பயன்படுத்தி குளித்து வர, சரும வறட்சி நீங்கி உடல் புத்துணர்வு பெறும். முகப்பருக்கள் குறையும். அடிபட்ட இடங்களில் சோற்றுக் கற்றாழையின் சதையை வைத்துக் கட்டும் பொழுது ரத்தம் கட்டுதல் ஏற்படாது.
நிலவேம்பு:
நிலவேம்புக் கசாயம் குடித்தால் கடுமையான காய்ச்சலும் சளியும் குணமாகும். குறிப்பாக குளிர்காலங்களில் வாரம் ஒரு முறை இதனைக் குடித்து வர காய்ச்சல் வருவது தவிர்க்கப்படுவதுடன் நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரையின் அளவு கட்டுப்படும். உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், வயிற்று புண்களும் குணமாகும். தொற்றுக்கள் பெருகுவதை கட்டுப்படுத்தவும் இது உதவுகிறது.
தூதுவளை:
அடிக்கடி மூச்சிரைத்தல், இருமல் ஏற்படுபவர்கள் தீராத சளி தொந்தரவினால் அவதிப்படுபவர்கள் தூதுவளை இலையுடன் இஞ்சி சேர்த்து சமைத்துச் சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைக்கும்.
பிரண்டை:
பிரண்டையின் மருத்துவ குணங்கள் ஏராளமானவையாகும். இதன் காரத்தன்மை காரணமாக பலரும் இதனை சாப்பிட விரும்புவதில்லை. நரம்பு மண்டலம் வலுபெறவும் எலும்புகள் உறுதி பெறவும் இதனை தவறாது உணவில் சேர்ப்பது அவசியமாகிறது.
மூட்டு வலி, எலும்பு தேய்மானம் ஆகியவற்றுக்குச் சிறந்த தீர்வினை இது வழங்குகிறது. குழந்தை பெற்ற தாய்மார்களின் உடல்வலியைப் போக்கவும் இது துணை புரிகிறது. பசியை அதிகரிக்கும் திறன்மிக்கதாகவும் இது விளங்குகிறது.
வெற்றிலை:
வெற்றிலைச் சாறு அனைத்து வயதினருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இதுவும் விஷ ஜந்துக்களை அண்ட விடாது. வெற்றிலையுடன் கிராம்பு, ஏலக்காய் மற்றும் சுண்ணாம்பு சேர்த்து உண்டு வர ஜீரண மண்டலம் பலம்பெறும். மேலும் தொண்டை வலியும் குணமாகும். வெற்றிலையின் சாறு கொண்டு வாய் கொப்பளிக்க, பற்களில் கறை படிவது கட்டுப்படுத்தப்படுகிறது.
வீட்டில் சிறு தொட்டிகளில் இச்செடிகளை வளர்த்து பயன்பெற முடியும்.
மூலிகை வளர்ப்போம்; ஆரோக்கியம் காப்போம்.
– எஸ். வாணி