ரஜினி – சீமான் சந்திப்பு: அரசியல் மாற்றத்தின் அறிகுறியா?

இன்னும் ஒன்றரை ஆண்டில் தமிழக சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிரதான கட்சிகள், ரகசியமாகக் கூட்டணிப் பேச்சு வார்த்தையைத் தொடங்கி விட்டன.

தமிழக வெற்றிக் கழகம் எனும் புதிய கட்சியை தொடங்கியுள்ள நடிகர் விஜயின் அடுத்தகட்ட நகர்வுகளுக்காக, சின்ன கட்சிகள் காத்திருக்கின்றன.

விக்கிரவாண்டியில் நடந்த, தனது கட்சி மாநாட்டில், ‘’ஆட்சியில் பங்கு கொடுப்போம்” என்ற கவர்ச்சிகரமான அறிவிப்பை விஜய் வெளியிட்டது, சிறிய கட்சிகளுக்கு, அவர்பால் ஒரு ஈர்ப்பை உருவாக்கி உள்ளது.

விஜய் கட்சியுடன், சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி கூட்டணி வைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவ்வாறு நிகழ்வதற்கான வாய்ப்புகள் குறைந்து விட்டன. அண்மைக்காலமாக விஜயை, சீமான் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.

‘2026 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் தனித்துப் போட்டி’ என அவர் பிரகடனம் செய்து விட்டார். இதனால் நாம் தமிழர் கட்சியில் இருந்து, மூத்த நிர்வாகிகள், வெளியேறி வருகின்றனர்.

தமிழக அரசியல் களம் குழம்பிய நிலையில் உள்ள சூழலில், ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தை, அவரது போயஸ் கார்டன் வீட்டில், கடந்த வியாழக்கிழமை சீமான் திடீரென சந்தித்தார். இந்த சந்திப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘ரஜினிகாந்தை சந்தித்தது ஏன்?’ என்பதற்கு சீமான், நீண்ட விளக்கம் அளித்துள்ளார். இந்த சந்திப்பு முடிந்து ரஜினி வீட்டில் இருந்து வெளியே வந்த சீமான் தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது பேசிய அவர், நீண்ட நாட்களாக ரஜினிகாந்தை சந்திக்க வேண்டும் என்று திட்டமிட்டு இருந்தேன் – ஆனால் அவர் படப்பிடிப்பில் பிஸியாக இருந்தார் – நானும் கட்சிக் கூட்டம் என பிசியாக இருந்தேன் – இதனால் இந்த சந்திப்பு தாமதமானது.

இன்று அந்த சந்திப்பு சாத்தியமானது – அன்பு மற்றும் மரியாதை நிமித்தமாகவே ரஜினிகாந்தை சந்தித்தேன்’ என குறிப்பிட்ட சீமான், இருவரும் அரசியல் பேசியதை ஒப்புக்கொண்டார்.

‘தமிழக அரசியலில் நல்ல தலைமைக்கான வெற்றிடம் உள்ளது – ரஜினியுடன் நிறைய விஷயங்கள் பேசினேன் – அதையெல்லாம் பகிர்ந்துகொள்ள முடியாது – சிஸ்டம் சரியில்லை என்று ரஜினி கூறியது சரிதான்.

அரசியல் உங்களுக்கு சரியாக வராது – ஏச்சுப் பேச்சுக்களைத் தாங்க வேண்டும் என்று ரஜினிகாந்திடம் கூறியிருக்கிறேன்.

ரஜினியுடன் திரைத்துறை, அரசியல் என பல விஷயங்களை பேசினேன் – ரஜினியைச் சந்தித்தது அரசியலுக்காக தான். அரசியல் இல்லாமல் எதுவும் இல்லை’ என சீமான் அந்த பேட்டியில் விளக்கமாக தெரிவித்துள்ளார்.

முடிவில் மாற்றம்?

சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்து போட்டியிடப் போவதாக இதுவரை சொல்லி வந்த சீமான், தனது முடிவை மாற்றிக்கொண்டதாக தெரிகிறது. கூட்டணி அமைக்கும் தீர்மானத்தில் இருப்பதை, அவர், ரஜினியிடம் பகிர்ந்து கொண்டதாக, அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறியுள்ளன.

இந்த விஷயத்தில் ரஜினியின் ஆதரவை சீமான் கேட்டுள்ளார். அதற்கு ரஜினி எந்த பதிலும் சொல்லவில்லை எனவும் கூறப்படுகிறது.

சீமானின் மன மாற்றங்களால், தமிழகத்தில் புதிய அணி சேர்க்கை உருவாகும் என அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

– பாப்பாங்குளம் பாரதி.

You might also like